தும்பை சித்த மருத்துவ பயன்கள்

Thumbai 1Thumbai Benefits in Tamil

தும்பை  நாடெங்கும் வயல்வெளிகளில் தானே விளைந்து கிடக்கும் ஓர் அரிய மூலிகைத் தாவரமாகும்; இது ஒரு அடி முதல் மூன்று அடி உயரம் வரை வளரும். இச்செடியில் நுண் மயிர்கள் காணப்படும். எதிர் அடுக்கில் அமைந்த தனி இலைகளை உடையது. வெள்ளை நிறப் பூக்களுடன் சிறிய செடிகளாகக் கேட்பாரின்றி விளைந்து கிடக்கும் . பெருவாரியாக இது விளைந்து கிடந்த இடங்களில் இப்போது பார்த்தீனியம் இடம் பிடித்து விட்டது.

தும்பையில்  பெருந்தும்பை, சிறுதும்பை, கருந்தும்பை, மலைத்தும்பை, கவிழ்தும்பை, காசித் தும்பை என்று பல வகைகளுண்டு. ஆனால் அந்தக்காலத்திலோ மன்னர் தும்பைப்பூ மாலை அணித்து விட்டால் நமது கருப்புப்பூனைகள் முண்டாசால்  முகத்தை மூடினால் என்னவோ அது தான் . தும்பை பூ  மாலை அணிந்து விட்டாலே அடுத்து  வருவது போர் தான்.

தொல்காப்பியத்தில் தும்பைப் போருக்கு என்று  தனி இலக்கணமே கூறி இருப்பதாகக் கூறுவர் . இதனடிப்படையில் இராவணன் போருக்குப் புறப்பட்ட போது தும்பை மாலை அணிந்ததாகக் கம்பர் காட்டுகிறார்.

மற்றும் வான்படை வானவர் மார்பிடை
இற்று இலாதன எண்ணும் இலாதன
பற்றினான்; கவசம் படர் மார்பிடைச
சுற்றினான்; நெடுந் தும்பையும் சூடினான். (யுத்த 1054)

இவனுக்கு எதிராகப் போர்க்கோலம் பூண்ட இராமன் துளசி மாலை அணிந்து, அதனுடன் தும்பைப்பூ மாலையும் சூட்டிக்கொண்டான் என்கிறார் கம்பர்.

அளவு அரு செஞ்சுடர்ப் பட்டம் ஆர்த்தனன்;
இளவரிக் கவட்டு இலை ஆரொடு ஏர் பெறத்
துளவொடு தும்பையும் சுழியச் சூடினான். (யுத்த 1072)

இவ்வாறு சங்க இலக்கியங்களிலும் தும்பைப்பூச் சூடிப் போருக்குச்சென்ற மன்னர்களைப் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன .

தமிழில் அற்றைக்கிருந்த செந்தமிழ் வார்த்தைகள் இன்னும் வழக்கொழியாமல் இருப்பது போல் இததகு தாவரங்களும் இன்னும் இருப்பதும் பெரு வியப்பே ! இவை இந்த வார்த்தைகளும்,  தாவரங்களும் தொடர்ந்து இடையறாமல் இன்று வரை பயன்பாட்டில் இருப்பதையே காட்டுகின்றன .

அரையாப்புக் கட்டி யனிலமுதிரம்
பிரியாச் சீதக் கடுப்பும் பேருந் – தரையிற்
பழுதைக் கொள்ளாச் செய்ய பங்கயப் பெண்ணே கேள்!
கழுதைத் தும்பைச் செடியைக் கண்டு

கழுதைத் தும்பை எனும்   கவிழ் தும்பை மூலிகையால் அரையாப்புக் கட்டி, வாத நோய், ரத்தமும் சீதமும் கலந்த வயிற்றுப்போக்கு  அத்தனையும் நீங்கும் என்கிறார் ஒரு சித்தர்.

முக்கிய வேதியப் பொருட்கள் -: இரண்டு ஸ்டீரால்கள், இரண்டு ஆல்கலாய்டுகள், காளக்டோஸ், ஒலியனாவிக் அமிலம், உர்காலிக் அமிலம் மற்றும் பீட்டா சிட்டோஸ்டீரால்.

தாவரப்பெயர்  :  LEUCAS ASPERA.
குடும்பம்      :  LABIATACEAE

தும்பைப் பூவையும், பெருங்காயத்தையும் அரைத்து சுத்தமான எண்ணெயில் கலந்து காய்ச்சி வடித்து வைத்துக் கொண்டு சொட்டு மருந்தாகக் காதிற்கு விட்டு வரக் காதில் சீழ்வடிதல் குணமாகும்.

தும்பை இலையை அரைத்து உள்ளுக்கும் கொடுத்து, வெளியிலும் பூசினால்  பூரான் கடி குணமாகும். அதனால் ஏற்பட்ட தடிப்பும், அரிப்பும் மறையும்.  தும்பை இலைச்சாற்றைத் தேன் கலந்து உள்ளுக்குத் தர நீர்க்கோவை குணமாகும். பாம்புக்கடிகளுக்கும் தும்பையும் மிளகும் சேர்த்து முதலுதவியாக அளிக்கலாம்.

தும்பைச் சாற்றுடன் சிறிது சோற்றுப்புக் கலந்து கரைத்து மேலுக்குப் பூசி உலரவிட்டுக் குழித்துவரச்  சிரங்கு , சொறி , நமச்சல்போகும்.

தும்பை இலைச் சாறை 3 சொட்டு மூக்கிலிட்டு உறிஞ்சித் தும்மினால் தலையில் நீரோ, கபால நீரோ, மண்டைக்குத்தலோ, மண்டையிடியோ குணமாகும்.

தும்பையிலைச் சாறு 25 மில்லியளவு பாம்பு தீண்டியவருக்குக் கொடுக்க இரண்டு  மூன்று முறை பேதியாகும். கபத்துடன் வாந்தியாகும். குளிர்ந்த உடல் சூடு அடையும்.புதுப்பானையில் பச்சரிசி, பாசிப்பயறு பொங்கி உப்பில்லாமல் சாப்பிட வேண்டும். ஒருநாள் முழுவதும் பாம்பு தீண்டியவரைத் தூங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மூன்று நாட்கள் உப்பில்லாமல் பொங்கல் செய்து கொடுக்க நஞ்சு இறங்கும். மயங்கிய நிலையில் இருந்தால் சாற்றினை நசியமிடலாம். நசியத்தில் தெளியவில்லையென்றால் இறப்பது உறுதி.

நச்சு முறிவில் தும்பை தனித்த ஒரு இடம் பெறுகிறது.

தும்பை இலை, கீழா நெல்லி இலை இரண்டையும்  சம அளவாக எடுத்து அரைத்துச் சுண்டைக்காய் அளவு 1 டம்ளர் பசும்பாலில் கலந்து 2 வேளை குடித்துவர மாதவிலக்கு ஒழுங்காக வராமல் இருப்பவர்களுக்கு முறையான மாதவிலக்கு ஏற்படும்.

தும்பைச் சாறும், வெங்காயச்சாறும் கலந்து ஐந்து நாள் தர ஆசனப் புண் குணமாகும். தும்பைச் செடியை அரைத்துத் தேமல் உள்ள இடத்தில்  பூசி வரத் தேமல் குணமாகும். தும்பைப் பூ, நந்தியாவட்டப் பூ, புளியம்பூ, புங்கம் பூ, எள் பூ, திப்பிலி ஆகியவற்றைச் சேர்த்துக் கண்ணுக்கு மையாகத் தீட்டிவர வெள்ளெழுத்து மாறும்; கண் பார்வை தெளிவடையும். இன்னும் எத்தனையோ பலன்கள் தும்பைக்கு; இதன் பயன்பாடு பாரம்பரியாமாக நம் நாட்டு மக்களிடையே இருந்துவருகிறது.

(1) அதிகாலையில் தும்பைப் பூவைப் பசும்பால் விட்டு அரைத்து உள்ளுக்கத் தர விக்கல் நீங்கும்.
(2) தும்பை இலையையும், மிளகையும் அறைத்து உள்ளுக்குக் கொடுத்து, வெளியிலும் பூச விசம் இறங்கும்.
(3) தும்பை இலையையும் தேள் கொடுக்கு இலையையும் அரைத்துத் தரத் தேள் கடி விசம் நீங்கும்.
(4) தும்பை வேரையும், மருக்காரை வேரையும் அரைத்து உடலில் பூசிக் குளிக்க வசம் இறங்கும்.
(5) தும்பைப் பூவையும், ஆடுதீண்டாப் பாலை விதையையும் அரைத்துக் கொடுத்துப் பசும் பால் பருகிவர ஆண்மை அதிகரிக்கும்.
(6) தும்பைச் சாறு, முசுமுசுக்கைச் சாறு, வல்லாரைச் சாறு இவைகளில் சீரகத்தைத் தனித்தனியே ஆறவைத்து உலர்த்திச் சூரணம் செய்து கொடுத்து வர இதயப் பலவீனம் நீங்கும். சுரத்திற்குப் பின் ஏற்பட்ட சோர்வு தீரும். பசி அதிகரிக்கும். காமாலை குணமாகும். பித்த மயக்கம், வாந்தி குணமாகும். நினைவாற்றல் அதிகரிக்கும்.
(7) தும்பைச் சாறு 200 மி.லி. வெங்காயச் சாறு 100 மி.லி. பசு நெய் 150 மி லி. ஆமணுக்கு நெய் 150 மி.லி. கலந்து காய்ச்சி வடிகட்டிக் குழந்தைகளுக்குக் கால் உச்சிக் கரண்டியளவு கொடுத்து வர மாந்தம், கணை தீரும். இருமல், இளைப்பு மாறும். மலர்ச்சிக்கல் நீங்கும். வயிற்றிலுள்ள பூச்சிகள் வெளிப்படும். உடல் சூடுதணிந்து குழந்தை ஆரோக்கியமாய் வளரும்.
(8) பெருந்தும்பைச் சாறு மோரில் கலந்து தரச் செரியாமை, கழிச்சல், மந்தம் நீங்கும்.
(9) தும்பைப் பூவையும், ஊமத்தம் பூவையும் அரைத்துப் புங்கு நெய்யில் கலந்து காய்ச்சி வடித்துக் காதிற்குச் சொட்டு மருந்தாகப் பயன்படுத்தி வரக்காதுப் புண், காதில் சீழ் வடிதல், காது இரைச்சல் தீரும்.
(10) தும்பைப் பூவையும், பெருங்காயத்தையிம் அரைத்துக் கடுகெண்ணெய்யில் கலந்து காய்ச்சி வடித்து வைத்ததுக் கொண்டு சொட்டு மருந்தாகக் காதிற்கு விட்டு வரக் காதில் சீழ்வடிதல் குணமாகும்.
(11) தும்பைச் சாற்றைத் தேனில் கலந்து சுட வைத்துக் குழந்தைகளுக்குப் புகட்ட இசிவு நீங்கும்.
(12) தும்பைச்சாறு 200 மி.லி. கழுதை மூத்திரம் 100 மி.லி. பசுநெய் 200 மி.லி. கலந்து காய்ச்சி மெழுகு பதத்தில் வடித்து உச்சிக் கரண்டியளவு உள்ளுக்குக் கொடுத்து, வெளியிலும் பூசிவரக் கிராந்தி புண் குணமாகும்.
(13) தும்பை இலைச்சாறு 10 மி.லி. எலுமிச்சம் பழச்சாறு 10 மி.லி. வெங்காயச்சாறு 5 மி.லி. எண்ணெய் 5 மி.லி. கலந்து காலையில் வெறும் வயிற்றில் கொடுத்து வரப் பெரும்பாடு நீஙுகும்.
(14) தும்பை இலை, உத்தாமணி இலை சம அளவு எடுத்து அரைத்துக் கோலிக் காயளவு பசும்பாலில் கொடுத்து வர மாத விலக்கினால் ஏற்படும் குறைபாடுகள் நீங்கும்.
(15) தும்பைப் பூவை வெள்ளாட்டுப் பாலில் கலந்து காயச்சி வடிகட்டிப் பாலைமட்டும் காலை வெறும் வயிற்றில் தொடர்ந்து நாற்பது நாள் கொடுத்துவரக் கர்ப்பப்பை சம்பந்தமான நோய்கள் குணமாகும்.
(16) தும்பைப் பூவையும், ஒருமிளகையும் அரைத்து நெற்றியில் பற்றுப் போடத் தலைவலி, தலைபாரம், நீர்க்கோர்வை நீங்கும்.
(17) தும்பைச் சாற்றையும்,பழச்சாற்றையும் சம அளவு எடுத்துக் கலந்து கொடுத்து வர ஆனந்த வாயு தீரும்.
(18) கழுதைத்தும்பை வேரை அரைத்து உள்ளுக்கும் கொடுத்து, வெளியிலும் பூச அரையாப்பு குணமாகும்.
(19) தும்பைச்சாற்றைக் கண், காது, மூக்கில் நசியமாய்ப் பயன்படுத்தி உள்ளுக்கும் கொடுத்துக் கடிவாயிலும் பூசப் பாம்புக் கடி நஞ்சு தீரும்.
(20) கவிழ்தும்பைச் சாற்றைப் பசும் பாலில் கலந்து தர இரத்தக் கழிச்சல், சீதக் கழிச்சல், மூலக் கடுப்பு தீரும்.
(21) தும்பை இலையை அரைத்து உள்ளுக்கும் கொடுத்து, வெளியிலும் பூச்ச் செய்யான் கடி குணமாகும். அதனால் ஏற்பட்ட தடிப்பும், அரிப்பும் மறையும்.
(22) தும்பை இலை, அவுரி இலை, மிளகு ஆகிய இவற்றைச்சேர்த்து அரைத்து உள்ளுக்கும் கொடுத்து, உடல் முழுவதும் பூசிவர எந்தக் கடிவிடமும் மாறும்.
(23) தும்பைப் பூ, நந்தியாவட்டப் பூ, புளியம்பூ, புங்கம் பூ, எள் பூ, திப்பிலி, ஆகியவற்றைச் சேர்த்துக் கண்ணுக்கு மையாகத் தீட்டிவர வெள்ளெழுத்து மாறும். கண் பார்வை தெளிவடையும்.
(24) தும்பைச்சாறு 500 மி.லி. தேங்காய்எண்ணெய் 500 மி.லி.இரண்டையும் கலந்து காய்ச்சி வெளிப் பிரயோகமாகப் பயன்படுத்த வெட்டுக் காயம், ஆறாத இரண்ங்கள் ஆறும்.
(25) தும்பை வேர், சுண்டைவேர் சூரணம், இலப்பைப் பிண்ணாக்கு சுட்ட சாம்பல் மூன்றையும் சன்னமாய் சலித்து எடுத்து மூக்கில் பொடியாய் பயன் படுத்ததலைபாரம், தலைவலி, மூக்கு நீர்பாய்தல், தலையில் உள்ள ரோகங்கள் எல்லாம் மாறும்.
26) தும்பை, குப்பைமேனி, கையான்தகரையைச்சூரண்ம் செய்து தொடர்ந்து கற்ப முறையில் சாப்பிட்டுவர உடலில் ஏற்படுகின்ற நோய்களும், மன விகாரமும் தீரும். நோய் எதிர்ப்புச் சக்தி உண்டாகும். நோயின்றி வாழலாம். இதையே ஔவை,
வாக்குண்டாம்;நல்ல மணமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது
துப்பார்…திரு மேனி தும்பை கையான் துணை‘ என்றார்.
தும்பிக்கையான் என்று தும்பிக்கையையுடைய விநாயகரை அவர் கூறவில்லை. திரு மேனி என்கின்ற குப்பைமேனியும், துரோணபுஷ்பம் என்னும் தும்பையும்,கைகேகி எனப்படும் கையானும் மருந்தாகத் துணையாக இருக்கும் போது வாக்குத் தெளிவுண்டாகும். நல்ல மனமுண்டாகும். மாமலரால் கலைமகளின் கடைக்கண் பார்வை கிட்டும். அதனால் கல்வி அறிவு உண்டாகும். இந்த உடல் முடங்கிப் போகாது;எப்போது? திருமேனியும், தும்பையும், கையானும்மருந்தாகித் துணை நிற்கும் போது என்கிறார்.
27) தும்பை வேர், சாரணைவேர், நாய்வேளை வேர், சித்துர மூல வேர், மிளகு, கழற்சுப் பருப்ப், கருஞ்சீரகம், பறங்கிப் பட்டை, பூண்டு ஆகிய இவற்றை ஓர் அளவாய் எடுத்துச் சூரணித்துத் தும்பைச் சாற்றில் பாவனை செய்து உலர்த்திப் பொடித்து ஒரு கிராம் அளவு பாலுல் அனுபானித்துத் தரச் சூலை, வாதம், முடக்கு வாதம், அண்டவாதம், வாயுக்குத்து, வயிற்றுப் பெருமல் தீரும்.
(28) சீரகம், காயம், வசம்பு ஆகியவற்றை வகைக்கு இருபது கிராம் எடுத்துத் தும்பைச் சாறு விட்டு அரைத்து மிளகளவு மாத்திரை செய்து குழந்தைகளின் உடல்வன்மை அறிந்து இஞ்சிச் சாறு, தேன், தாய்பால் ஏதாவது ஒன்றில் உரைத்துத் தரக் குழந்தைகளுக்கு ஏற்படுகின்ற மாந்தம், அதனடியாய்ப் பிறக்கின்ற மாந்த வலிப்பு, இசிவு, பொருமல், செரியாக் கழிச்சல் தீரும்.
(29) தும்பைச் சாறு 30 மி.லி. துத்தி இலைச் சாறு 30 மி.லி. பசும் பாலில் கலந்து கொடுத்து வர உள் மூலம், புற மூலம், இரத்த மூலம் தீரும்.
(30) ஒமத்தை அரைத்துத் தும்பை இலைச் சாறு கூட்டித் தர மாந்தம், மாந்தக் கழிச்சல், வயிற்றுப் பொருமல் தூரும்.
(31) தும்பைச் சாறு; பொடுதலைச் சாற்றில் பெருங்காயத்தை உரசித் தரச் சுழிமாந்தம், போர்மாந்தம் நீங்கும்.
(32) தும்பைச் சாறு, கண்டங்கத்திரிச் சாறு இரண்டையும் தேனில் கலந்து தரக் கணை மாந்தம், மந்தாரக்கணம் தீரும். இருமல், இசிவு நீங்கும்.
(33) கவிழ் தும்பைச்சாறு, எண்ணெய் இரண்டையும் கலந்து மூன்று நாள் தர எலிக் கடி நஞ்சு தீரும்.
(34) தும்பை வேர், தைவேளை இலை, ஈர வெங்காயம் மூன்றையும் அரைத்து வைத்துக் கட்டப் பவுத்திரம் குணமாகும்.
(35) தும்பைப் பூ, தும்பை இலை, திப்பிலிச் சூரணத் ஆகிய இவற்றுடன் அக்கரகாரம் கலந்து தேனில் குழைத்துத் தரத் தொண்டைச் சதை வளர்ச்சி கட்டுப்படும்.
(36) தும்பை, மிளகு, வசம்பு, ஆகிய இம்மூன்றையும் அரைத்துத் துணியில் பொட்டலம் கட்டி நசியம் செய்யச் சன்னி தீரும்.
(37) தும்பைச் சாற்றை மூக்கில் நசியமிடப் பாம்புக் கடி நஞ்சு தீரும்.
(38) தும்பைச் சாற்றைத் தேன் கலந்து உள்ளுக்குத் தர நீர் கோவை குணமாகும்.
(39) தும்பைப் பூவைத் தாய் பாலில் ஊறவைத்துக் கண்ணில் பிளியச் சன்னி தீரும்.
(40) திம்பைப் பூவைப் பசும்பால் விட்டரைத்து எண்ணெய்யில் கலந்து காய்ச்சித் தலை முழுகி வரத் தலைபாரம், ஒற்றைதுதலைவலி,மூக்கடைப்பு, நீரேற்றம் நீங்கும்.
(41) பல் முளைக்கும் போது குழந்தைகளுக்கு ஏற்படும் பேதியைத் தடுக்கப் பெருந்தும்பை இலைக் குடிநீரைக் குழந்தைகளுக்குக் கொடுத்துவரலாம்.
(42) தும்பைச் சாற்றுடன் சிறிது சோற்றுப்பு கலந்து கரைத்து மேலுக்குப் பூசி உலரவிட்டுக் குழித்துவரச் சரங்கு, சோறி, நமச்சல் தீரும்.
(43) தும்பைச் செடியைஅரைத்துத் தேமல் உள்ள இடத்தில் தொடர்ந்து பூசிவரத் தேமல் குணமாகும்.
(44) தும்பைக் குடி நீர் செய்து தர வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், மந்தம் தீரும்.
(45) தும்பைச் சாற்றைக் கண்ணிற்குச் சொட்டு மருந்தாகப் பயன்படுத்தக் கண் பூ மாறும்.
(46) தும்பை இலையை அரைத்துக் கற்பமாக்கி எருமை மோரில் கலந்து பத்து நாள் தரச்சுக்கிலமேகம் தீரும்.

தும்பை பொடி வாங்க வேண்டுமா இங்கு கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *