சீரக சூரணம் பயன் மற்றும் செய்முறை: cumin chooranam
அகத்தைச் சீர்படுத்துவதால் இதற்குச் சீரகம் எனற காரணப் பெயர் என்பர் cumin chooranam benefits in tamil
உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை முறை மற்றும் முறையற்ற உணவுப் பழக்கத்தால் பலருக்கும் சீரணமண்டல பாதிப்புகள் ஏற்படுகின்றன. அதுவே அவர்களது உடலில் பல்வேறு நோய்கள் உருவாகவும் காரணமாக அமைகின்றன.
நெஞ்செரிச்சல், புளித்த ஏப்பம், மேல் வயிற்று வலி, அஜீரணம், வாந்தி, வாந்தியில் லேசாக இரத்தம் வெளியேறுதல், பசியின்மை, ருசியின்மை, வயிற்று உப்புசம், அடிக்கடி மலம் கழிக்கும் உணர்வு இவையெல்லாம் இன்றைக்கு சர்வ சாதாரணமாகப் பலருக்கும் ஏற்படும் பிரச்னைகள். இவை ஏற்படுவதற்கான அடிப்படையான மிக முக்கியமான காரணம் செரிமானக் கோளாறு. இது முற்றினால் வயிற்றுப்புண்(அல்சர்) ஏற்படும்.
அஜீரணத்திற்கு சீரகத்தை மட்டும் நீரிலிட்டு நன்கு கொதிக்க வைத்து குடித்து வர நன்கு ஜீரணம் ஆவதோடு, உடலும் குளிர்ச்சியடையும். உடல் உஷ்ணத்தினால் அஜீரணம் ஏற்பட்டிருந்தால் உடனே சரியாகிவிடும்.
ஒரு சிலருக்கோ எப்போதுமே நெஞ்செரிச்சல், செரிமானமின்மை, வாயு பிரச்சனை என இருந்து கொண்டே இருக்கும்.அவர்களுக்கான நிரந்தர தீர்வு தரும் இந்த சீரக சூரணம்.
சீரக சூரணத்தை வேளைக்கு ஒரு கிராம் எடுத்து தேன் கலந்து சாப்பிட்டு வர பித்த வாயு நீங்கும்.ஒரு கிராம் சீரகப்பொடியை வெல்லத்துடன் சேர்த்து உண்டால் விக்கல் நிற்கும்.சீரகத்தை சம அளவு நாட்டுச் சர்க்கரையுடன் சேர்த்துத் தூளாக்கி வைத்துக் கொண்டு ஒரு தேக்கரண்டி வீதம், காலை, மாலை வேளைகளில் சாப்பிட்டு வர உதடு வெடிப்பு, உதட்டுப் புண் குணமாகும். பித்தம், வாயு, உதிரச்சிக்கல் தீர சீரக சுரணத்தை ஒரு கிராம் அளவு எடுத்து தேன், பாலுடன் கலந்துப் பருகி வந்தால் குணம் பெறலாம்.
சீரக சூரணம் வீட்டிலேயே செய்வது எப்படி
100 கிராம் சீரகம் மூழ்கும் அளவு எலுமிச்சை பழச்சாறை விட்டு ஓர் இரவு முழுவதும் விட வேண்டும். பழச்சாறில் ஊறிய சீரகத்தை கண்ணாடி அல்லது பீங்கான் தட்டில் நன்றாக வெயிலில் காய வைக்க வேண்டும். காய்ந்த சீரகத்தை மறுபடியும் மேற்கூறிய முறையில் பழச்சாறு விட்டு மூன்று (அ) ஏழு முறை அவரவர் வசதிப்படி எலுமிச்சை சாறில் ஊற வைத்து, காய வைத்து சீரகத்தை நன்றாக மிக்ஸியில் பொடித்துக் கொள்ள வேண்டும். படிக்க மிகவும் எளிமையாக தோன்றும் சீரக சூரணம் செய்து முடிக்க குறைந்தது ஒரு மாதம் கூட ஆகலாம்.
எலுமிச்சை சாறில் ஊறிய சீரகம் என்னவெல்லாம் செய்யும் என்பதை படித்தால் வரும் மயக்கத்தில் பித்தமே காணாமல் போகும்.
இந்த முறையில் செய்து முடிக்கப்பட்ட சீரக சூரணத்தை இரண்டு கிராம் வெந்நீருடன் தினமும் இரு வேளை (நாற்பது நாட்கள்) வெந்நீருடன் எடுத்து வர பித்தத்தால் உண்டாகும் இரத்த அழுத்தம், மயக்கம், கிறுகிறுப்பு, வாயு, மைக்ரேன் தலைவலி, உதடு வெடிப்பு, உதட்டுப் புண்கள், புளித்த ஏப்பம், வயிற்று வலி, வாந்தி, சூடு, ஆசனவாய் எரிச்சல், வலி என பல வியாதிகளைக் குணமாக்கும். வாய் முதல் ஆசனவாய் வரை உள்ள செரிமான உறுப்புகள் இந்த சீரக சூரணத்தால் வலுப்பெறும்.
நாட்டுமருந்து.காம் இணையத்திற்க்காக :
நலம் வாழ
திருமதி: ஈஸ்வரி